மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ரூ.52,900 ரொக்கம், கூகுள் பே மூலம் பெறப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

          திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் லஞ்சமாகப் பெறப்பட்ட பணம் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

           திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜன் தலைமை மற்றும் 8 போலீசார் அடங்கிய குழுவினர், இன்று மாலை சரியாக 4:30 மணிக்கு தாடிக்கொம்பு முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

         அலுவலகத்தின் நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டு, வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாதவாறு இந்த சோதனை தீவிரமாக நடைபெற்றது.

        இரவு 7:35 மணி நிலவரப்படி, பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ. 52,900 ரொக்கப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், அங்கு பணிபுரியும் தற்காலிக ஊழியர் ஒருவரின் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, கூகுள் பே (Google Pay) செயலி மூலமாக ரூ.1 லட்சம் பெறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதுவும் பறிமுதல் செய்யப்பட்டது.

         டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ரூ.1 லட்சம் பெற்ற தற்காலிக பணியாளர் உட்பட, மேலும் இரண்டு தற்காலிக பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

          இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜன் தகவல் தெரிவிக்கையில், "தற்போது வரை கைது நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பணத்திற்கான கணக்குகள் மற்றும் ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த விசாரணை மற்றும் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னரே, அடுத்தகட்ட மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.

        பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.