ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் மாற்றுத்திறனாளி பயணியை அவமதிக்கும் நோக்கில் நடந்து கொண்ட சம்பவம் வீடியோ ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிரில்குமார். மாற்றுத்திறனாளியான இவர், மதுரைக்குச் செல்வதற்காக ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட்டில் வந்து நின்ற கோவை - மதுரை தடம் எண் கொண்ட அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் ஏறி நடத்துனரிடம் டிக்கெட் எடுக்கும்போது, தனக்குரிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைக் காட்டி அதற்கான சலுகைக் கட்டணத்தில் டிக்கெட் கேட்டுள்ளார்.
அப்போது, அந்த அடையாள அட்டையை வாங்க மறுத்த நடத்துனர் பிச்சைமணி, பயணியை நோக்கிப் பலவாறு கேள்விகளை எழுப்பிக் கடுமையான முறையில் விமர்சித்துள்ளார். இதை வைத்து உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் யூஸ் பண்ணுவீர்கள்? என்றும், "உன் முகத்திற்கும் இந்த போட்டோவிற்கும் சம்பந்தமில்லை, யார் என்று கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறி டிக்கெட் தர மறுத்துள்ளார். மேலும், வண்டியை விட்டு இறங்கு என்று நடத்துனர் கூற, அதற்குப் பயணி சிரில்குமார், "நான் ஒரிஜினல் கார்டு தான் தருகிறேன், நான் இறங்க முடியாது, என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
நடத்துனர் தொடர்ந்து டிக்கெட் தராமல் இழுத்தடித்ததோடு, அந்தப் பயணியை அநாகரிகமாகப் பேசியதை சிரில்குமார் மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் பல்வேறு சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், களத்தில் உள்ள அரசு ஊழியரே இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நடத்துனர் பிச்சைமணி மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாகத் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.