திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எனக்கு நியாயம் வேணும் என 90 வயது முதியவர் தரையில் படுத்து அழுததால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட விருவீடு அருகே உள்ள விராலிமாயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விராலிமாயதேவர் (வயது 90). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். @இவரது விவசாய நிலத்திற்கு வரும் ஓடையை, அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தாலுகா அலுவலகத்திலும் விராலிமாயதேவர் (90) தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளார். @இந்த நிலையில், இன்று மீண்டும் மனு அளிப்பதற்காக விராலிமாயதேவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனுவை அளித்தார். பின்னர், தனது மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, கூட்ட அரங்கிலேயே அவர் அமர்ந்து கொண்டார்.
அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முயன்ற போது, 90 வயது முதியவர் திடீரென தரையில் படுத்துக்கொண்டு, வெளியே செல்ல மாட்டேன் என கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அவர் அழுதபடியே கூட்ட அரங்கை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே அமர்ந்திருந்தார்.
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் முன்பு, 90 வயது முதியவர் தரையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.