85 வயது முதியவர் பட்டா மாறுதலுக்காக ஆட்சியர் அலுவலகத்தில் மனு: உரிய நடவடிக்கை இல்லையெனில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவிப்பு !
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டத்திற்குட்பட்ட மேலபந்தை கிராமத்தைச் சேர்ந்த 85 வயது முதியவர் குப்பப்பிள்ளை, தனது பூர்வீக நிலப் பட்டா மாறுதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.
இவருக்குச் சொந்தமான சுமார் 15 சென்ட் பூர்வீக நிலம், 'யு.டி.ஆர்' (UTR) நில அளவையின் போது கூட்டுச் சொத்தாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த யு.டி.ஆர் பதிவேட்டில் திருத்தம் செய்து, மீண்டும் தனது பெயரிலேயே தனிப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர் மனு கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டா மாறுதல் செய்யக் கோரி கலவை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் பலமுறை நேரில் மனு அளித்தும், அவர்கள் எந்தவித உரிய பதிலும் சொல்லாமல் தொடர்ந்து அலைக்கழித்து மன உளைச்சல் ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்த நிலை நீடித்தால், நிலத்தைப் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் உண்ணாவிரதம் இருந்து உயிரை விடவும் தயங்கப் போவதில்லை என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
85 வயது முதியவரின் இந்த அறிவிப்பு குறைதீர் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: மணிகன்டன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.