மாவட்ட செய்திகள்

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகம் திறப்பு

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகம் திறப்பு

             இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஜூன் 19 அன்று ரயில் பெட்டி உணவகம் திறந்து வைக்கப்பட்டது. மதுரை கோட்டத்தில் முதன்முறையாக வித்தியாசமாக ரயில் பெட்டியில் உருவாக்கப்பட்ட உணவகத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா துவக்கி வைத்தார்.

           இதற்காக பழுதடைந்த பழைய ரயில் பெட்டி ஒதுக்கப்பட்டது. அதன் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உணவாகமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பழைய ரயில் பெட்டிகளை ஏலம் எடுப்பவர்கள் சுக்கு நூறாக நொறுக்கி விற்பனை செய்து விடுவார்கள். ஆனால் ராமேஸ்வரத்தில் பயணிகளை மட்டுமே சுமந்து சென்ற இந்த ரயில் பெட்டி, உணவகம் என்ற மறு அவதாரம் எடுத்துள்ளது.

          24 மணி நேரமும் இயங்கும் இந்த உணவகத்தில் வெளியில் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்ட சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஒன்றுக்குமே உபயோகப்படாது என கருதப்பட்ட பழைய ரயில் பெட்டி ரயில்வே நிர்வாகத்திற்கு கணிசமான வருமானத்தை அளிக்கும்.

           இந்த வித்தியாசமான முயற்சி ரயில் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவக துவக்க விழாவில் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ், தெற்கு ரயில்வே துணை முதன்மை வர்த்தக மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், கோட்ட வர்த்தக மேலாளர் மோகனப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.