காந்தியின் இலங்கை வருகையின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட வேண்டும் தமிழகப் பேராசிரியர் கோரிக்கை
இலங்கை கொழும்புத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழகப் பல்கலைக்கழகமான காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய தமிழகம்- ஈழம் : சிந்தனை மரபில் காந்தியத்தின் தாக்கம் என்னும் பொருண்மையிலான பொன்விழா ஆண்டு கருத்தரங்கம் இலங்கை கொழும்புத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் விநோதன் அரங்கில் 14.06.2026 அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கிருட்டினர் பொன்னுத்துரை வரவேற்றுப் பேசினார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக் குழுச்செயலாளர் தெட்சிணாமூர்த்தி மதுசூதனன் தலைமையுரையாற்றினார்.
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் இணையவழியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். காந்திகிராம பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஆனந்தகுமார் நோக்கவுரை ஆற்றினார். அவர் தனது உரையில் காந்தியச் சிந்தனைகள் காலம் கடந்து நிலைத்து நிற்பவை. காந்தியடிகளின் மையம் விலக்கப்பட்ட அரசு (கிராம சுயராஜ்யம்) உள்ளிட்ட கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருத்தப்பாடு உடையவை. அவற்றை இளந்தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும். இலங்கைக்கும் காந்தியடிகளுக்குமான தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
அவர் இங்கு 1927 நவம்பர் 12 முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை 20 நாட்கள் தங்கியிருந்து மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணித்துள்ளார். காந்தியடிகளின் கடையனுக்கும் கடைத்தேற்றம் உள்ளிட்ட சமூக முன்னேற்றச் சிந்தனைகளுக்கு அவர் இங்கு நேரில் கண்ட தமிழ்கநாடகங்களில் புலம்பெயர்ந்த மக்களின் இன்னல்கள் காரணமாக அமைந்தன. காந்தியடிகள் முதன்முதலில் இலங்கைக்கு வருகை புரிந்து நூறாண்டுகள் நிறைவு பெறுகின்றன. அதனை இலங்கை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என்றார்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்தின் முதல் அமர்வில் காந்தி கடந்தி காந்தியம் என்ற தலைப்பில் பேராசிரியர் மௌனகுரு, தமிழ்க் கவிதைப் பரப்பில் காந்தியம் என்ற தலைப்பில் பேராசிரியர் ஆனந்தகுமார், ஈழத்துச் சிந்தனை மரபில் காந்தியம்: சமூகம்- அரசியல்- இலக்கியம் யாழ்ப்பாணப் பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வமனோகரன், மலையகச் சூழலில் காந்தியம் : சமூகம்- அரசியல்- இலக்கியம் என்ற தலைப்பில் முனைவர் ஜெயசீலன், தமிழ்ச்சிறுகதைகளில் காந்தியம் என்ற தலைப்பில் எழுத்தாளர் முனைவர் வேணுகோபால் ஆகியோர் கட்டுரை வழங்கினர்.
இரண்டாம் அமர்வில் ஈழத்துத் தமிழ் நாடகங்களில் காந்தியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் முனைவர் அழகையா விமல்ராஜ் , சாமிநாத சர்மாவின் நாடகங்களில் காந்திய மதிப்பீடுகள் என்னும் தலைப்பில் காந்திகிராம பல்கலைத் தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் ஜோஸ்பின் செல்வி, அகிலன் புனைகதைகளில் காந்திய விழுமியங்கள் என்ற தலைப்பில் காந்திகிராமப் பல்கலை முனைவர் பட்ட ஆய்வாளர் தாட்சாயனி, காந்தி ஊடு நிகழ்த்துகையும் ஈழத்துக் கல்வி அருட்டலும் என்ற தலைப்பில் பேராசிரியர் சபா ஜெயராஜ் ஆகியோர் கட்டுரை வழங்கினர். பின்னர், கட்டுரையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கொழும்புத் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் நன்றியுரை ஆற்றினார்.
செய்தி: குருபாண்டியன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.