போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலையில் வழக்கறிஞர் கோபிநாத் தலைமையில் மாற்றுக் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்தனர்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலையில் போடிநாயக்கனூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் கோபிநாத் தலைமையில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைப்பு விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தவெக நிர்வாகி அறிவு வரவேற்புரையாற்றினார். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், கழக செய்தி தொடர்பாளரும், மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை நிறுவனமான நடிகர் சௌந்தரபாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசுகையில் " போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் தவெக ஆட்சி அமைத்தபின் பல நலதிட்ட உதவிகளை செய்து வருகிறோம். தங்களது பகுதியில் ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள் நிறைவேற்றி தருகிறோம்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக, அமைச்சராக, துணை முதல்வராக ஏன் முதலமைச்சராக இருந்தும் கூட தனது சொந்த மாவட்ட தேனி மாவட்டத்திற்கு எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளையும் செய்ய முன்வரவில்லை. தேனியில் ஒரு மேம்பாலம் கூட அமைத்து தரவில்லை முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசலாகி பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்திருந்தார்.எம்.ஜி.ஆர் உருவாக்கி ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இன்று உயிர்ப்போடு இல்லை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாயை கடந்து வந்தால் எங்கு பார்த்தாலும் முன்பு பசுமையாக இருக்கும். ஆனால் தற்போது இல்லை விவசாய தொழில்கள் குறைந்து வருகின்றன. முதலமைச்சர் விஜய் விவசாயிகளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பார். அவர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் தாய்மாமன் சீர் திட்டம், வெற்றி மகளிர் பயணம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஆகவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றியை தேடித் தந்து முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கரத்தை வலுப்படுத்தவோம்" என பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், போடி நாயக்கனூர் 22 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மணிமேகலை கோபிநாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், தவெக பிரமுகர் ஆரோ செல்வம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக்காக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தவெக கட்சியில் இணைந்தவர்களுக்கு தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கட்சி துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிறப்பு அழைப்பாளர்களை வரவேற்கும் விதமாக போடிநாயக்கனூர் நகர் முழுவதும் தவெக கொடி தோரணங்கள் மற்றும் விளம்பர பதாகைகளை அமைத்து வழக்கறிஞர் கோபிநாத் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி: G.ராஜா
கருத்துகள் (0)
Be the first to comment on this article.