குரும்பூர் ரயில்வே நிலையத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான விநாயகர் கோவில் நீதிமன்றம் மூலம் உத்தரவின் படி ரயில்வே துறையினர் அகற்றம்,
குரும்பூர் ரயில்வே நிலையத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான விநாயகர் கோவில் இருந்தது. இந்த கோவில் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளது என நீதிமன்றம் மூலம் உத்தரவு வாங்கி, அதனை அகற்றுவதற்கு ரயில்வே துறையினர் மூலம், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காவல்துறையினர் மூலம் ரயில்வே விநாயகர் கோயிலை அகற்றுவதற்கு ஆயத்தமான பணிகள் ஆரம்பிக்க இருந்தது. இதனை அறிந்த இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கைவிடப்பட்டது.
பின்னர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் அருணாசலம் மற்றும் மாநில துணைத்தலைவர் விபி.ஜெயக்குமார் தலைமையில் குரும்பூர் ரயிலடி விநாயகர் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது கோவிலை அகற்ற மாட்டோம் என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக குரும்பூர் ரயிலடி விநாயகர் கோயிலை அகற்றுவதாக தகவல் பரவியது. இதனால் மீண்டும் இரவோடு இரவாக அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நரேஷ், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், ஏடிஎஸ்பிக்கள் சகாய ஜோஸ் மற்றும் திபு, மற்றும் குரும்பூர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உட்பட 6க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்களும், ரயில்வே அசிஸ்டன்ட் கமிஷனர் சிவதாஸ் தலைமையில் ரயில்வே போலீசார் உட்பட 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அந்த பகுதி விடிய விடிய பரபரப்பாக காணப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் விடிய விடிய கோவிலை திறந்து வைத்து யாகசாலை வளர்த்து பூஜை செய்ய ஆரம்பித்தனர். அதிகாலை 3 மணி அளவில் யாகசாலை செய்து கொண்டிருந்த இந்து முன்னணி, பாரதிய ஜனதா மற்றும் பொதுமக்களை போலீசார் கோவிலை விட்டு வெளியேற கேட்டுக் கொண்டனர். அவர்கள் வெளியேற மறுத்ததை அடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டயமாக வெளியேற்றி போலீஸ் வேனில் ஏற்றினர்.
தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் அருணாச்சலம், ஆழ்வை ஒன்றிய பாஜக செயலாளர் மனோகரன், மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ், மாநில ஆலய மேம்பாட்டு குழு முத்தையாதாஸ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஜெயராம், ஆழ்வை ஒன்றிய தலைவர் சிவஜோதி பாண்டியன் உட்பட சுமார் 20 பேரை கைது செய்து திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் ரயிலடி கோவிலில் இருந்த விநாயகர் சிலையை அகற்றி எடுத்து ஏரல் தாசில்தார் செல்வகுமாரிடம் ஒப்படைத்து, அதனை தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் குரும்பூர் ரயிலடி விநாயகர் கோவிலை இடித்து தரைமட்டம் ஆக்கினார். இதனால் விடிய விடிய குரும்பூர் ரயில் நிலையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
செய்தி: விஜி
கருத்துகள் (0)
Be the first to comment on this article.