மாநில செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் டெல்லி பயண நிகழ்வுகள்

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று (27.05.2026) டெல்லி சென்றார்.

         தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்கு பிறகு முதல் முறையாக டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அப்போது அவரை தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான ஜெயா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர். முதலமைச்சர் விஜய், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.             

        இதனையடுத்து முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ அலுவலகமான சேவா தீர்த்தத்தில் சந்தித்து பேசினார். தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை சந்தித்து பேசும் முதல் அதிகாரப்பூர்வ நிகழ்வு இதுவாகும். இந்த சந்திப்பின் போது வந்தே மாதரம் பாடல் விவகாரம், வான்வழி அமைப்பு மையத்தினை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் (AMCA - CABS உள்கட்டமைப்பு மீதான DRDO ஆராய்ச்சி) மேகதாது பிரச்சினை, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரம் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.

            இந்நிலையில் முதலமைச்சர் விஜய் புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். இந்த உயர்மட்டச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டிற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடு, நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை, முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஒப்புதல்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவிகள் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய நிதி சார்ந்த கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் மத்திய நிதியமைச்சரிடம் விரிவாக முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அதோடு மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான நல்லுறவு மற்றும் பொருளாதாரக் கூட்டுறவு குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

         இதனை தொடந்து டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். இன்று சென்னை திரும்புகிறார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.